கத்திகுத்தில் இரு பொலிஸார் படுகாயம்: 3 பேர் கைது

ByEditor 2

Jun 25, 2025

பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதில், இரண்டு பொலிஸார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் மூவர் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம், மட்டக்களப்பு சின்ன ஊறணியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லுகளால்   புதன்கிழமை (25) பிற்பகல் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதில், இரு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள்   உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி ஓடியுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த திருடன் அவனது வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான புதன்கிழமை (25) பிற்பகல் 01.30 மணியளவில் அவனை கைது செய்வதற்காக இரு பொலிஸார் சிவில் உடையில் அங்கு சென்று அவனை கைது செய்ய முற்பட்டனர்.

இதன் போது அங்கு பொலிஸார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இரு பொலிஸார் பலத்த காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை நடாத்திய திருடன் உட்பட 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் மீது தாக்குதலை நடாத்திய திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *