நுவரெலியா அஞ்சல் கட்டிடம்: அமைச்சரவை தீர்மானம் இரத்து

ByEditor 2

Jun 25, 2025

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு 2024.04.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒப்படைப்பதற்கு எதிராக தபால் ஊழியர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். குறித்த கட்டிடத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னரைப் போன்று மேற்கொண்டு செல்வதற்கும் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் மற்றும் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், செவ்வாய்க்கிழமை (24) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு/வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், புதிய வருமான ஈட்டல்களுக்கு இயலுமை கிட்டும் வகையில் கட்டிடம் மற்றும் காணியை நவீனமயப்படுத்துவதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *