பரீட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அடித்தே கொன்ற தந்தை!

ByEditor 2

Jun 24, 2025

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாதனா போஸ்லே. இவர் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது தந்தை தோண்டிராம் போஸ்லே அங்குள்ள பாடசாலை ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். சாதனா மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் அவர் பங்கேற்ற நிலையில், தேர்வு முடிவு வெளியானபோது குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். 

இதனால் அவரால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. இதுகுறித்து சாதனாவிடம் அவரது தந்தை தோண்டிராம் கேட்டபோது, “நீங்கள் எந்த ஜில்லாவிற்கு கலெக்டர் ஆனீர்கள். நீங்களும் குறைவான மதிப்பெண்கள் தானே எடுத்தீர்கள்” என ஆவேசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் தலைக்கேறிய தோண்டிராம், அருகில் கிடந்த கிரைண்டர் கல்லில் பொறுத்தப்பட்டிருந்த கட்டையை உருவி மகள் என்றும் பாராமல் சரமாரியாக அடித்துள்ளார். 

அவரது தாயார் தடுத்து நிறுத்திய போதும், அவரது ஆத்திரம் அடங்கவில்லை எனத் தெரிகிறது. இரவு முழுக்க தனது மகளை தோண்டிராம் அடித்து உதைத்ததாக தெரிகிறது. காலையில் எழுந்த தோண்டிராம் பாடசாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அவர் பாடசாலையில் இருந்து திரும்பி வந்தபோது சாதனா மயங்கி கிடந்தார். 

உடனே பெற்றோர் இருவரும் அவரை வைத்தியசாலையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சோதித்து பார்த்த வைத்தியர்கள் சாதனா ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

தனது மகளை பறிகொடுத்த சாதனாவின் தாயார் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் தோண்டிராமை கைது செய்தனர். 

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக தந்தையே மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *