இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ByEditor 2

Jun 24, 2025

மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து, இஸ்ரேலின் மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையம் (PIBA) அவர்களது RE-ENTRY விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

இந்த முடிவு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

“PIBA இன் இந்த நடவடிக்கை, போர் காரணமாக திட்டமிட்ட திகதியில் இஸ்ரேலுக்கு வர முடியாத வெளிநாட்டினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமான நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார். 

மேலும், இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியதும் எந்தவித தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் உறுதியளித்தார். 

இதேவேளை, அம்மான் விமான நிலையத்திலிருந்து புது டில்லி செல்ல திட்டமிட்ட விமானத்தில் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர், இது இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜூன் 25 ஆம் திகதி புறப்பட உள்ளதாக தூதுவர் தெரிவித்தார். 

அடுத்த சில நாட்களில் எகிப்து வழியாக இலங்கைக்கு திரும்புவதற்கு 20 இலங்கையர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 5 பேர் ஏற்கனவே இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர் என்று நிமல் பண்டார தெரிவித்தார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்துள்ள போதிலும், இஸ்ரேல் அரசாங்கம் இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. தூதுவர், “இந்த புதிய போக்கு குறித்து இஸ்ரேல் அரசின் இறுதி நிலைப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். 

இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான முன்மொழியப்பட்ட சமாதான முயற்சி இஸ்ரேலின் வணிக நடவடிக்கைகளை வழக்கம்போல தொடர அனுமதிக்கும் என்று தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *