எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது

ByEditor 2

Jun 19, 2025

டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது.

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று (19) வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழ்ந்தது. இந்த விபத்தானது ஸ்டார்ஷிப் திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது அனைத்து விண்கல தயாரிப்புகளையும் காலவரையின்றி நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

  ஜூன் 29 அன்று ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் விண்கலத்தை இயக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. இது உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் அமைப்பின் 10-வது சோதனையாகும்.

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு 2025-ம் ஆண்டில் ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் திட்டத்ததுக்கான மூன்றாவது தோல்வியாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரண்டு ஸ்டார்ஷிப் சோதனை விண்கலன்கள் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறின. ஒரு விண்கலம் கரீபியனில் விழுந்தது, மற்றொன்று கட்டுப்பாட்டை இழந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து உடைந்தது.

நிலவுக்குச் செல்லும் பயணங்களுக்கான திட்டங்களுடனும், செவ்வாய் கிரகத்துக்கான பயணத் திட்டங்களுடனும், மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் எலான் மஸ்க்கின் நோக்கத்துக்கான நம்பிக்கையாக ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போதைய பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ‘மீண்டும் மீண்டும் பின்னடைவுகள் இருந்தபோதிலும், நிறுவனம் விரைவான வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான சோதனைகளுடன் முன்னேறியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு கற்றல் வாய்ப்பாக கருதுகிறோம். இந்த வெடிப்புச் சம்பவம், புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உள்ளார்ந்த அபாயங்களைக் காட்டினாலும், ஸ்டார்ஷிப்பின் இறுதி வெற்றி விண்வெளிப் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும். பூமிக்கு அப்பால் மனிதர்களையும் சரக்குகளையும் கொண்டு செல்லக்கூடிய விண்கலத்தை உருவாக்குவோம்’ என்று தெரிவித்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *