டெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம்

ByEditor 2

Jun 18, 2025

இஸ்ரேல் – ஈரான் போர் நேற்று 5 ஆவது நாளாக நீடித்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இராணுவ முகாம்கள், எண்ணெய் வயல்கள், மின்விநியோக கட்டமைப்புகள், குடிநீர் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் அதிதீவிர தாக்குதலை நடத்தின. 

ஈரானின் மத்திய வங்கி மற்றும் பிரதான வங்கிகளைக் குறிவைத்து இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு இணைய தாக்குதலை நடத்தியது. இதனால் ஈரானின் வங்கித் துறை முழுமையாக முடங்கியுள்ளது. ஈரானில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. இதனால் ஈரான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் உடல் நலம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் நடான்சு அணுசக்தி தளம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த நாட்டின் போர்டோ, இஸ்பஹான் அணுசக்தி தளங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் நடான்சு பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் குடும்பத்துடன் ஈரானின் பாதுகாப்பான பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *