மன்னாரில் ஆர்ப்பாட்டம்

ByEditor 2

Jun 11, 2025

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து புதன்கிழமை (11) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுத்தனர்.  

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து மகஜரை கையளித்தனர்.

மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர், “மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கு அறிவேன். மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் என்னிடம் கை அளிக்கப்பட்டுள்ள  நிலையில்,நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *