ஆறு வருடத்திற்கு பிறகு கூடிய NBMC

ByEditor 2

Jun 2, 2025

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இந்தக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் எயார்வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாடவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

முதலில் NBMCபாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ உத்தியின் (IBMS) ஒரு அங்கமாக நிறுவப்பட்டது – இது பத்து வருடங்களுக்கு முன்பு சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் கனடா அரசாங்கங்களின் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டதாக்கும்.இது, தேசிய எல்லைகள் வழியாக எழும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதுடன், குறிப்பாக ஒழுங்கற்ற இடம்பெயர்வு தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறது. அதன் ஆரம்பத்திலிருந்து, எட்டு NBMC அமர்வுகள் நடத்தப்பட்டு பின்னர் 2021 முதல் ஒரு இடைவெளிக்கு பின் இத்தடவை மீண்டும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் IBM மூலோபாயத்தின் கீழ் உருவாக்கப்பட்ட எல்லை ஆபத்து மதிப்பீடு நிலையம் (BRAC) மட்டுமே பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்பட்டு வந்தது.

உலக அளவில், குறிப்பாக பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரங்களில் மாற்றம் ஏற்பட்டு வரும் சூழலில், கட்டமைக்கப்பட்ட எல்லை முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பாதுகாப்பு அமைச்சு NBMC-ஐ மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

 வெளியுறவு அமைச்சு, பொதுப் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை,சுங்கத் திணைக்களம்,கடற்படை, போலீஸ் திணைக்களம் மற்றும் கடலோர காவல் படை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இவ் அமர்வின் போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு, குறிப்பாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க,உறுதியான தேசிய பாதுகாப்பின் வகிபாகத்தை வலியுறுத்தினார். எல்லைப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் அடிப்படை தூண் என்று தெரிவித்த அவர் இத்துடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பொறுப்புக்கூறலுடன்கூடிய தீவிர ஈடுபாட்டை வேண்டி நின்றார்.

கூட்டத்தின் போது, ஒழுங்கற்ற இடம்பெயர்வு, எல்லை தாண்டிய மனிதர்கள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் மற்றும் சர்வதேச எல்லைகள் வழியாக தப்பிச் செல்லும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள், போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராயப்பட்டன.

இந்த அச்சுறுத்தல்களுக்கு விரைவான மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளுக்கான அவசரத் தேவையை பாதுகாப்புச் செயலாளர் எடுத்துரைத்தத்துடன் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மற்றும் சர்வதேச கட்டமைப்புகளுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். மேலும் அவுஸ்திரேலியா மற்றும், கனடா அரசுகள் மற்றும் IOM அமைப்பும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவையும் அவர் பாராட்டினார். அத்துடன் எதிர்காலத்திலும் அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பாக நம்பிக்கை தெரிவித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் NBMC-ஐ மீள் ஆரம்பத்திற்கு பங்களித்த அமைச்சு ஊழியர்கள் மற்றும் பங்கேற்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இக் குழு அதன் அடிப்படை மூலோபாய நோக்கங்களுடன் இணைந்திருக்கும் அதே வேளையில் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப உருவாக்கவும் அவர் அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *