இம்யூனோகுளோபுலின் மருந்து; சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை

ByEditor 2

Jun 2, 2025

இம்யூனோகுளோபுலின் மருந்து குறித்து வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவின் யையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. 

இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இம்யூனோகுளோபுலின் மருந்தானது, இலங்கையில் 2023 ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதோடு, மேலும் மருந்தின் தரம், பாதுகாப்பு, மருத்துவ மற்றும் மருந்தியல் நிலை ஆகியவற்றின் சரியான மதிப்பீட்டிற்குப் பிறகு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இந்த மருந்துக்கான பதிவை வழங்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில், மருந்தின் நிலை குறித்து ஒரு தௌிவற்ற தன்மை காணப்படுவதாகவும், எனவே இந்த மருந்தை பயன்பாட்டிலிருந்து அகற்றுமாறு மருத்துவ விநியோக பிரிவுக்கு பாதுகாப்பு மற்றும் இடர் மதிப்பீட்டு உப குழு அறிவித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்த நாட்டில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் அந்த மருந்து சரியான தரத்தில் இருந்தது தெரியவந்தது. 

இந்தியாவில் உள்ள மத்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் இந்த மருந்து குறித்து நடத்தப்பட்ட தர ஆராய்ச்சி மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கைகளைப் பரிசீலித்த பிறகு, விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு மற்றும் இடர் மதிப்பீட்டு உப குழு, மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தீர்மானித்து, மருத்துவ விநியோகப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளது. 

அதன்படி, சம்பந்தப்பட்ட மருந்தின் தரம் குறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை, மருந்தை மீண்டும் பயன்படுத்தலாம் என்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *