உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பேன் : ஜனாதிபதி

ByEditor 2

May 31, 2025

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். 

கல்கிரியாகம, பஹமினியாகம சிறி சமாதி விகாரையின் தாது வளாகம் மற்றும் சிலை திறப்பு நிகழ்வில் இன்று (30) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். 

வண. காகம சிறிநந்த தேரரின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி தாது வளாகத்தை திறந்து வைத்ததன் பின்னர் அதற்கு முதலாவதாக மலர் துவி வழிபட்டார். 

அதனை தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

தான் ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை என்றும், மக்களின் துயரங்களை உண்மையாகவே கண்ட மற்றும் அனுபவித்த தலைவர் என்ற வகையில் அனைத்து மக்களுக்காகவும் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். 

சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்ட மற்றும் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக காணப்படும் நாட்டை தற்போதும் அரசாங்கம் கட்டியெழுப்பியுள்ளதெனவும், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து முற்றாக விடுக்கும் பொறுப்பை உறுதியாக நிறைவேற்றி, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் இணைந்த குற்ற வலையமைப்புக்களை உடைப்பதற்கான நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

அனைவரும் எதிர்பார்க்கும் அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான நலமிக்க சமூகம் மற்றும் கருணையுள்ளம் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதில் இந்நாட்டு மகா சங்கத்தினருக்கு முதன்மை பொறுப்பு உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக வண. காகம சிறிநந்த தேரர் முன்னெடுக்கும் சமூக மற்றும் சாசன பணிகளை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *