“தேசிய உற்பத்தித்திறன் விருது விழா

ByEditor 2

May 16, 2025

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 15 ஆம் திகதி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் விருது விழா 2025/2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கல்வித் துறைக்கான போட்டி பிரதமர் கலாநிதி அமரசூரியர் அவர்களினாலும், அரச துறைக்கான போட்டி கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினாலும், உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான போட்டி ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திர பிரதான சிங்கவிதானவினாலும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது,

“கடந்த சில வருடங்களாக எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்த விருது விழாவை நடத்த முடியவில்லை. ஒரு நாடாக நாம் அதற்காக வருத்தப்பட வேண்டும். இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காததால் இந்த நாடு இந்த நிலையை அடைந்துள்ளது.” அது பற்றி நாங்கள் விளங்கியிருக்கிறோம். எமது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் நமது பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் மக்கள் அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. “புத்தாக்கங்களைச் செய்யாத தேசம் உலகில் முன்னேற்றமடையாது” என்று நம் முன்னோர்களின் ஒரு முதுமொழி உள்ளது. நாம் புதிய விடயங்களைச் சிந்தித்து, புதிய விடயங்களை உருவாக்காவிட்டால், நாம் முன்னேற மாட்டோம் என்பது இதன் பொருள். எனவே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய படைப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விருது வழங்கும் விழாவை மீண்டும் ஆரம்பிப்பது, எமது நாட்டு மக்களுக்கு ஒரு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்குவதன் ஒரு பகுதியாகும். “Clean Srii Lanka” என்பதும் இந்த விடயங்களைப் பற்றியது தான். இவை ஒவ்வொன்றும் தனித்தனியான திட்டங்கள் அல்ல. இணைக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது

அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கும் திட்டங்கள். உற்பத்தித்திறன் என்பது கடினமாக உழைப்பது மட்டுமல்ல, அதிக உற்பத்தித்திறனை அடைய வளங்களை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதும் ஆகும்.

நம்மைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பதன் மூலம், குறிப்பாக அரச நிறுவனங்களில், பணிகளை மிகவும் திறமையாகவும் எளிதாகவும் நிறைவேற்ற முடியும். உற்பத்தித்திறனை அதிகரிப்பது எமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. உற்பத்தித்திறன் குறைவது ஒரு நாட்டை எதிர்மறையாக பாதிக்கிறது.

எங்கள் நாடு பொருளாதார ரீதியாக சீரழிக்கப்பட்டமையால், நாங்கள் வங்குரோத்துநிலையை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. “எனவே, முதலீட்டை மூலோபாய ரீதியாக அதிகரிக்கவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும், போட்டித்தன்மையை அதிகரிக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிப்பது அவசியமானதாகும்” என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எம்.எம். எச். அபேரத்ன, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர ஆகியோர் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *