சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் திருட்டு

ByEditor 2

May 14, 2025

கொழும்பு, கொள்ளுப்பிடியவில் உள்ள சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பாக, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் மற்றொரு பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அங்கு தங்க நகைகள், வைரம் பதித்த மோதிரம் மற்றும் சுமார் ரூ.4.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு கைக்கடிகாரங்கள் ஆகியவை ஒரு பெட்டகத்திலிருந்து திருடப்பட்டன.

சுவிட்சர்லாந்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி  சென்று ஏப்ரல் 27 ஆம் திகதி திரும்பிய சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே இவர்கள் மூவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூதுவர் சுவிட்சர்லாந்துக்கு சென்ற பிறகு, சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக நகல் செய்யப்பட்ட சாவியைப் பயன்படுத்தி அவரது பெட்டகத்தை அணுகியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் பின்னர் திருடப்பட்டன.

விசாரணைகளைத் தொடர்ந்து, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட நகல் சாவியை உருவாக்கியதாகக் கூறப்படும் சாவி வெட்டும் தொழிலாளி ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல மோதிரங்களை வெலிகமவில் உள்ள சந்தேகத்திற்குரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருட்டு நடந்த நேரத்தில், இரண்டு பெண் வீட்டு வேலைக்காரர்களும் ஒரு சமையல்காரரும் வீட்டில் இருந்தனர். அவர்கள் விசாரிக்கப்பட்டு, பின்னர் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மூன்று சந்தேக நபர்களும் புதுக்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *