6 கோடி ரூபாய் மதிப்புள்ள “குஷ்” எனும் போதைப்பொருளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து “கிரீன் சேனல்” (Green Channel ) வழியாக வெளியேறிக்கொண்டிருந்த ஒரு இளம் வெளிநாட்டு பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இந்தப் பெண், திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். அவர், 21 வயதான பிரித்தானிய பிரஜையாவார்.
திங்கட்கிழமை (12) மாலை 3.45 மணியளவில் தாய்லாந்து பெங்கொக்கில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.-405 என்ற விமானத்தில், வர்த்தக வகுப்பில் பயணித்து, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டுவந்த இரண்டு பயணப்பொதிகளில் எவ்விதமான வேறு பொருட்களும் இன்றி, 46 கிலோ கிராம் “குஷ்” எனும் போதைப்பொருள் மட்டுமே இருந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிகளவான “குஷ்” போதைப்பொருள் என்று கட்டுநாயக்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.