யாழில் நடிகர் பாஸ்கர்

ByEditor 2

May 12, 2025

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் குறும்படத்தில் , யாழ்ப்பாணத்திற்கு வந்து,  யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு வரும் “கர்மா” எனும் குறும்படத்தில் நடிப்பதற்காக கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்த எம். எஸ் பாஸ்கர் , யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து 42  கடல் மைல் தூரத்தில் உள்ள வேதாரணியம் அருகில் உள்ள முத்துப்பேட்டை எனும் ஊரே எனது ஊர். எங்கள் ஊருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நிறைய தொடர்புகள் இருக்கு. வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் எமது ஊரில் வசித்துள்ளார்

எனது அப்பாவுக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருந்தன.  எங்கள் வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் வந்து தங்கி நின்றுள்ளார்கள்.

எனது ஊரை ஒற்ற , கலாச்சரம் , உணவு பழக்கவழக்கம் தான் இங்கே காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உணவகங்களில் உணவருந்தாமல் , பட உருவாக்க குழுவினரின் வீட்டில் உணவருந்தியமையால் , எங்கள் வீட்டு சுவையுடன் உணவருந்தியது போன்று இருந்தது. 

அது மட்டுமின்றி இங்குள்ளவர்கள் தமிழ் மொழி பேசுவதால் , வேறு நாட்டில் இருக்கும் எண்ணம் இல்லாமல் எங்கள் ஊரில் இருப்பது போன்றே இருந்தது. 

யாழ்ப்பாண பேச்சு வழக்கு மொழியில் பேசி நடித்து இருக்கிறேன். ஒரு குழந்தை எவ்வாறு பேச கற்றுக்கொண்டு பேசும் போது , ஏற்படும் சந்தோசம் போன்று யாழ்ப்பாண பேச்சு வழக்கை கேட்டு அவ்வாறே பேசும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இந்த வயது முதிர்ந்த குழந்தை நன்றாகவே யாழ்ப்பாண பேச்சு வழக்கை பேசி இருக்கிறது என நம்புகிறேன்.

படப்பிடிப்புக்காக வந்துள்ளமையால் , என்னால் பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்க முடியவில்லை, விரைவில் எனது குடும்பத்துடன் யாழ்ப்பாணம் மீண்டும் வந்து யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்கும் எண்ணம் உள்ளது. 

ஈழத்தின் கதைகளை தென்னிந்திய திரைப்படங்கள் போதுமானதாக எடுத்து செல்கிறது என இங்குள்ளவர்கள் நினைத்தால் , அந்த இயக்குநர்களை பாராட்டுங்கள். 

போதுமானதாக இல்லாமல் இருந்தால் அந்த இயக்குனர்களுக்கு உங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக எடுத்து கூறுங்கள் அதன் ஊடாக ஈழ கதைகளை திறமையாக எடுத்து செல்ல சொல்லுங்கள் என்றார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *