பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர்

ByEditor 2

May 5, 2025

பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னல பொலிஸ் காவலில் இருந்து குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வடமேற்கு பல்கலைக்கழகத்தின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பீடத்தில் விரிவுரையாளராக  பணிபுரிந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கழிப்பறையில் கமரா

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், பி அறிக்கை மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர் உட்பட 7 பெண் விரிவுரையாளர்கள் மற்றும் 9 ஆண் விரிவுரையாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறை அமைப்பில் மின்சார கட்டணங்களுடன் இணைக்கப்பட்டு முகம் கழுவும் தொட்டியின் கீழ் ரகசியமாக பொருத்தப்பட்ட ஒரு சிறிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் விரிவுரையாளர் அதைக் கவனித்து நிர்வாக மேற்பார்வையாளருக்கு தகவல் அளித்த பின்னர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை வழக்குப் பொருளாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட கமரா சம்பவம் அம்பலமான நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தப்பிச் செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள்

சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக  கூறி, சந்தேக நபருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் சார்பாக ஆதாரங்களை முன்வைத்த வழக்கறிஞர், இந்த விடுதி வளாகத்தில் தற்போது 9 விரிவுரையாளர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 7 பேர் பெண்கள் என்று சுட்டிக்காட்டினார்.

விரிவுரையாளர்களில் ஒருவர் முகம் கழுவிக் கொண்டிருந்த இடத்தில், தொட்டியின் அடியில் இருந்து கறுப்பு நிற கம்பி தொங்குவதைக் கவனித்ததை அடுத்து, சந்தேகமடைந்து சக விரிவுரையாளரிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஆய்வு செய்ததில், அது வைபை சின்னத்துடன் கூடிய மிகச் சிறிய, உயர் தொழில்நுட்ப கமரா என அடையாளம் காணப்பட்டது. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வேறு இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

குறித்த கழிப்பறையை அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்களின் பிள்ளைகளும் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த வீடியோக்கள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்துவிடும் அபாயம் உள்ளதென வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க முடியாதென கூறிய நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *