உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சி மரியெல்லா, (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது.
மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த எம்எஸ்சி மரியெல்லா கப்பல் 399.90 மீட்டர் நீளமும் 61.30 மீட்டர் அகலமும் கொண்டது. 240,737 தொன் எடையுள்ள கொள்கலன்களை கையாளக்கூடிய இந்த பெரிய கப்பல் 2023 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்தக் கப்பல் கிழக்கு கொள்கலன் முனையத்தில் 1,600 கொள்கலன்களை ஏற்றி இறக்கும் என்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக பணிப்பாளர் கனக ஹேமசந்திர தெரிவித்தார்.
மேலும், எம்.எஸ்.சி மரியெல்லாவின் வருகை இலங்கையின் கடல்சார் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் என்றும், இது சர்வதேச கடல்சார் துறையில் இலங்கையின் பெயரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவின் கடல்சார் மையமாக மாற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கனவு நனவாகி வருவதற்கான அறிகுறியாக இந்த மிகப்பெரிய கப்பலின் வருகை அமைந்துள்ளது.