STF இனால் தடுக்கப்பட்ட கொலை

ByEditor 2

Apr 22, 2025

கம்பஹாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பிரதான விருந்தினராகப் பங்கேற்கவிருந்த வியாபாரி ஒஸ்மன் என்பவரைப் படுகொலை செய்ய, கெஹெல்பத்தர பத்மே எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி திட்டமிட்டிருந்ததாக கொழும்பு குற்றப்பிரிவு கண்டறிந்துள்ளது.

புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், கம்பஹா வத்துமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது, எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்தது.

கம்பஹா பிரதேச வியாபாரியான ஒஸ்மன் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மன்” என்பவரைப் படுகொலை செய்யத் தயாராக இருந்த எட்டு பேர், கடந்த ஏப்ரல் 19 அன்று பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் ஆயுதங்கள் மற்றும் பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளில், கைதானவர்களில் சிலர் பொது மன்னிப்புக் காலத்தில் இராணுவத்திலிருந்து விலகியவர்கள் எனவும், மற்றொருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் எனவும் தெரியவந்துள்ளது.

கணேமுல்லையில் சஞ்ஜீவ படுகொலையை மேற்கொண்ட எஸ்.எஃப்.சலிந்த, தம்மை இயக்கியதாகவும், கெஹெல்பத்தர பத்மேவின் தேவைக்காக ஒஸ்மானைப் படுகொலை செய்யத் தயாரானதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா ஒஸ்மன் பிரதான விருந்தினராகப் பங்கேற்கும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் அவரைப் படுகொலை செய்யுமாறு கெஹெல்பத்தர பத்மே அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டீ-56 ஆயுதங்களால் இரு பக்கங்களிலிருந்தும் தாக்குங்கள். எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை. ஒஸ்மன் கொல்லப்பட வேண்டும்,” என கெஹெல்பத்தர பத்மே உத்தரவிட்டதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளர், மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திக லொகுஹெட்டி மற்றும் அப்பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.விஜேதுங்க ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *