யாழ். பருத்தித்துறை – தும்பளையில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது 69) என்ற மூதாட்டியே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் திருடும் நோக்குடன் சென்ற இளைஞரே மூதாட்டியைத் தாக்கி படுகொலை செய்துள்ளார். மேற்படி இளைஞன் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் சகோதரிகளான இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (20) காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அந்நிலையில் இரண்டு மூதாட்டிகளும் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார்கள் என நினைத்து, அயல்வீட்டு இளைஞர் வீட்டினுள் களவுக்குச் சென்றுள்ளார்.
அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞர் களவில் ஈடுபடுவதை அவதானித்ததை அடுத்து இளைஞர் பொல்லால் மூதாட்டியைத் தலையில் பலமாகத் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.
தேவாலயத்துக்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டுக்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த துடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அயல் வீட்டு இளைஞரை தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர், கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
