இல்லத்தரசிகளால் உப்பு , புளி ருசி பார்க்க முடியவில்லை

ByEditor 2

Apr 17, 2025

சமீப சில நாட்களாக தங்களால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை என்று இல்லத்தரசிகள் முகம் சுழிக்கின்றனர். உப்புப் புளி தட்டுப்பாட்டால் அடுக்களைச் சமையல் கசந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது உப்பு, புளியம்பழம் ஆகிய சுவையூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடும் கிராக்கியும் காணப்படுவதால் இல்லத்தரசிகளால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை. இவ்விரண்டு சுவையூட்டிகக்கான  விலையும் எகிறியுள்ளது.

50 கிராம் புளியம்பழம்  100  ரூபாவுக்கு இரகசியமாக விற்கப்படுகிறது. அதேபோல கடைகளில் கல் உப்பு பெற முடியாத நிலை உள்ளது.  கைவசம் இருக்கும் தூள் உப்பை கடைக்காரர்கள் அதன் வழமையான வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் இரகசியமாக விற்பனை செய்கிறார்கள்.

தூள் உப்பை இரகசியமாக வழங்கும்போது இந்த உப்பை மருந்து போல பயன்படுத்துங்கள் என்று  கடைக்கார்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குவதையும் காணக்கூடியதாகவுள்ளது. சதோச விற்பனை நிலையங்களிலும் உப்பு, புளியம்பழம் என்பன விற்பனைக்கு இல்லை.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு காலத்தில் சுமார் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட  அஸ்வெசும பயனாளிகளுக்கு சதோச விற்பனை நிலையங்களினூடாக 5000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியை சலுகை விலையில் 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அத்தகைய பொதிகள் எதுவும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை.

கடந்த ஏழாம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்து சதோச நிலையங்களிலும் இந்த 5000 ரூபாய் பெறுமதியான சலுகை உலருணவுப் பொதிகளை 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அரச ஊடகங்களும் இந்தச் செய்தியை திரும்பத் திரும்ப அறிவித்து வந்தன.

ஆனால், உள்ளுரதிகாரசபை தேர்தல் தொடர்பான பிரகடனத்தால் இத்தகைய புத்தாண்டு சலுகை உலருணவுப் பொதி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, விநியோகிப்பதற்காக நாடெங்கிலுமுள்ள சதோச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகள் மீளப் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *