பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு பலத்த காற்று வீசியதால் வடக்கு மற்றும் கிழக்கு சீனா முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பலத்த காற்றின் விளைவாக பல விமானங்கள் தரையிறக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன, மேலும் சீனாவின் பெரும்பகுதியில் அவசர வானிலை எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டன.
அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர், ஏப்ரல் 12 ஆம் திகதி, தொடர்ச்சியான புயல்களுக்கு மத்தியில் விழுந்த மரத்தில் மோதி இறந்தார்.
ஏப்ரல் 11-13 வரை, அருகிலுள்ள ஹெனான் மாகாணத்தில் மணிக்கு 167 கிலோமீட்டருக்கும் (மணிக்கு 104 மைல்) அதிகமாக காற்று வீசியதாக சீன வானிலை ஆய்வு நிர்வாகம் (CMA) தெரிவித்துள்ளது.
ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க பெய்ஜிங்கில் மில்லியன் கணக்கான மக்கள் வார இறுதியில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 50 கிலோகிராம்க்கும் குறைவான எடையுள்ளவர்கள் ” எளிதில் அடித்துச் செல்லப்படலாம் என ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்தன.
வடக்கு சீனா முழுவதும் உள்ள நகரங்களில், காற்றினால் 800க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததுடன், நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நசுங்கி, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது .
ஏப்ரல் 14 ஆம் திகதி வரை வடக்கு சீனாவில், குறிப்பாக உள் மங்கோலியா மற்றும் கிழக்கு கடற்கரையில் உள்ள ஜியாங்குவாய் பகுதியில் காற்றுடன் கூடிய வானிலை நீடித்தது , இது அதிக காட்டுத் தீ ஆபத்து உள்ள பகுதிகளை பாதித்ததாக CMA எச்சரித்தது.