முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் – ஜனாதிபதி 

ByEditor 2

Apr 13, 2025

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய மக்கள் சக்தியே முன்னெடுத்து வந்தது. இன்று முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று சனிக்கிழமை (12) முதன் முறையாக விஜயம் செய்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் ஜனாதிபதி தலைமையிலான மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் ‘வெற்றி நமதே ஊர் நமதே’யின் வெற்றிக்கூட்டமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதில் வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வருகைதந்து இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான வாழ்த்தினை தெரிவிக்கும் வகையில் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்த தேசிய கலைஞருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *