ஒரே நாளில் 720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டிய கலிப்சோ ரயில்

ByEditor 2

Apr 10, 2025

இலங்கையின் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கும் முகமாக நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே திறந்தவெளி காட்சிக்கூடங்களைக் கொண்ட “கலிப்சோ” ரயில் சேவையின் முதல் நாளில் 720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

இதனை ரயில் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

காட்சிக்கூடங்கள், உணவு, இசை பொழுதுபோக்கு அம்சங்கள்

கலிப்சோ ரயில் தனது முதல் சேவையை செவ்வாய்க்கிழமை (08) காலை நானுஓயாவிலிருந்து தெமோதரை ரயில் நிலையத்துக்கு ஆரம்பித்தது. இதன்போது, 172 இருக்கைகள் வெறுமையாக இருந்ததோடு, 72 பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 153,000 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருக்கும்.

கலிப்சோ ரயில், வழித்தடத்தில் இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திறந்தவெளி காட்சிக்கூடங்கள், உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வசதிகளைக் கொண்டுள்ளது.

பயணத்தின் விசேட அம்சமாக சுற்றுலாப் பயணிகள் உலகப் புகழ்பெற்ற ஒன்பது வளைவுப் பாலத்தின் அழகை அனுபவிக்க நிறுத்தப்படும். அத்தோடு, ரயில் பல சுரங்கப்பாதைகள் வழியாகச் செல்லும்.

இந்த ரயில் பயணம் 4 1/2 மணித்தியாலங்களை கொண்டமைந்துள்ளது. இந்த ரயில் பயணம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து புறப்பட்டு தெமோதரை ரயில் நிலையத்தை பிற்பகல் 12.25 மணிக்கு சென்றடையும்.

மீண்டும் தெமோதரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1:15 மணிக்கு புறப்பட்டு நானுஓயாவை மாலை 5:35 மணிக்கு சென்றடையும். அதேவேளை நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *