மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

ByEditor 2

Mar 28, 2025

 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (26) பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

 தடியால் அடித்த ஆசிரியர்

அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, குறித்த மாணவி , தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு , பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறிய நிலையில் அந்த மாணவியும் அதனை செய்துள்ளார்.

இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து   கடுமையாக எச்சரித்து மாணவிகளை தடியால் அடித்து  தண்டனை வழங்கியுள்ளார்.

அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது, மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது , மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் நேற்றைய தினம் (27) மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (27)இரவு , ஆசிரியருக்கு ஆதரவாக பாடசலையின் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையம் முன்பு கூடியிருந்த நிலையில் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம். நீதிமன்றில் வந்து பார்க்குமாறு கூறியதை அடுத்து அவர்களை கலைந்து சென்றதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *