குடித்துவிட்டு பெண்களுக்கு இடையூறு

ByEditor 2

Mar 21, 2025

நுவரெலியா –  தலவாக்கலை பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள மிடில்டன் பகுதிக்கு செல்லும் குறுக்கு குடிபோதையில் உள்ள நபர்கள், அந்த  வழியில் செல்லும் பெண்களுக்கு இடையூறு விளைவிப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் பல தடவைகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

நடவடிக்கை எடுக்காத  பொலிஸார்

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை 5.30 மணியளவில் அவ்வழியே சென்ற பெண்ணை மதுபானம் அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் கேலி செய்ததுடன் அதில் ஒருவர் பியர் போத்தலால் பெண்னை தாக்க துரத்தியுள்ளார்.

அச்சத்துடன் ஓடிய பெண் தனது கையடக்கத்தொலைபேசி மூலம் குறித்த இளைஞரை படம் எடுத்துள்ளார்.

அதையடுத்து இளைஞரும் , பெண்ணை தனது கையடக்கத்தொலைபேசியில் படம் எடுத்ததுடன் பியர் போத்தலை காட்டி மிரட்டியுமுள்ளார். இதையடுத்து, பெண் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 இற்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

ஆனால், முறைப்பாட்டை பதிவு செய்து அரை மணித்தியாலயத்துக்கும் மேல் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலிருந்து எவரும் அவ்விடத்துக்கு வருகை தராததால் அவர் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின்னர் தலவாக்கலை பொலிஸிலிருந்து ஒருவர் கதைத்து தகவல்களை எடுத்துக்கொண்டாலும் எவரும் அவ்விடத்துக்கு வருகை தரவில்லையென பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த வழியாகச் செல்லும் பாடசாலை மாணவிகள், குடும்பப் பெண்களுக்கு மதுபோதையில் இருப்பவர்கள் இவ்வாறாக தொடர்ச்சியான இடையூறையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வரும் அதேவேளை மதுபான போத்தல்கள் , பியர் டின்களையும் பாதையில் வீசிச்செல்கின்றனர்.

எனவே சம்ப்ந்ததப்பட்ட அதிகாரிகள், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *