இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
மொரீஷியஸ் நாட்டின் 57ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தீவு நாடான மொரீஷியசை சென்றடைந்ததும், மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரீஷியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, இது எனக்கான கௌரவம் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கௌரவம்.
இந்த விருது, இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புகளுக்கான அடையாளம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.