முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தத்தில் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை. அதற்காக நாங்கள் துறைசார் குழுவொன்றை நியமிப்போம் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் புதிய ஜனநாயக கட்சி உறுப்பினர் பைசர் முஸ்தபா உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை தனியார் சட்டமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்த விடயத்தில் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தவேண்டும் என்ற விடயத்திலேயே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதனால் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திலு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அந்த சமூகத்தில் இருந்தே தெரிவிக்கப்படும் விடயம். அதனால் இந்த விடயத்தில் நாங்கள்் தன்னிச்சையாக செயற்படப்போவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.
அதனால் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது தொடர்பில் நாங்கள் முஸ்லிம் உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர், மத அமைப்புகள் மற்றும் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு மிகவும் சிறந்த தீர்மானத்துக்கு செல்ல வேண்டும். அதற்காக நாங்கள் துறைசார் குழுவொன்றை நியமிக்கிறோம் என்றார்.