பரவி வரும் பன்றி காய்ச்சல்

ByEditor 2

Mar 7, 2025

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாக பரவி பன்றி பண்ணைகளில் இழப்பை ஏற்படுத்திய பன்றிக்காய்ச்சல் வடமாகாணத்திலும் பல பாகங்களில் பரவி அதிகளவான உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பண்ணைகளிலும் ,இந்த நோய்தொற்று பரவிமையால் அதிகளவான பன்றிகள் உயிரிழந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த 5 பண்ணைகளிலும் பன்றிகளின் குருதிமாதிரிகள் பெறப்பட்டு பேராதனை மிருகவியல் ஆராய்ச்சி நிலையத்தால் நோய் உறுதிப்படுத்தப்பட்டமையை தொடர்ந்து அந்த பண்ணைகளை உடனடியாக மூடிப் பண்ணையின் சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் குறித்த பண்ணைகள் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டுள்ளன.

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலானது, பன்றிகளின் நேரடி தொடுகை மூலமாக மட்டுமின்றி மனித உடல்,உடை மற்றும் வானங்கள் ஊடாகவும் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதுடன், நோய்தொற்று கண்டறியப்பட்ட சகல பண்ணைகளையும் தற்காலிகமாக மூடி பண்ணை நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *