எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் திங்கள் கிழமை (03) அறிவித்துள்ளது. இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை முதல் நாளான மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மே மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு பேட்டியளித்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்களிப்புக்கான திகதி குறித்து விவாதித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவை எட்ட சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
“அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப தொடர்புடைய திகதி அறிவிக்கப்படும்,” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.
2025 பட்ஜெட் விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை கோருவதில் தாமதம் செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள, அதே நேரத்தில் அரசாங்கம் முந்தைய அறிவிப்பை வலியுறுத்தி வருகிறது.
தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து குறிப்பாக குரல் கொடுத்து வருகிறது.
2023 ஆம் ஆண்டுக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல், வேட்புமனுக்கள் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகள் இந்த தாமதத்தை நீதிமன்றத்தில் எதிர்த்தன, 2025 தேர்தலுக்கு அதே வேட்புமனு பட்டியலைப் பயன்படுத்துவது நியாயமற்றது என்று வாதிட்டன.
புதிய நியமன செயல்முறைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவைப்படும் என்று நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
2025 வரவு -செலவு திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக, திங்கட்கிழமை (03) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ள காணொளியில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க,உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களுக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 25 மாவட்டங்களிலும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். கல்முனை மாநகர சபை, தெஹியத்த கண்டிய பிரதேச சபை , மன்னார் பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறாது என்றார்
அவற்றை தவிர்த்து, 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடைபெறும். மார்ச் 17ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். கட்டுப்பணம் முதல் நாளான 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அத்துடன், அந்த நாட்களுக்குள் வரும் போயா, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது.
இந்நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் மீள செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரையிலும் 93 மில்லியன் ரூபாய் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெற்றுக் கொள்ளாதவர்கள் இருந்தால், அதற்கான விண்ணப்பத்துடன், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.
இம்முறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பணமாக 5000 ரூபாயையும் அரசியல் கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா 1500 ரூபாவையும் செலுத்த வேண்டும். அந்தந்த பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளுக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை வேறுபடும்.
இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளை பதியும் நடவடிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 28ஆம் திகதி வரையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் அரசியல் கட்சி பதிவும் வெவ்வேறான செயற்பாடுகளாகும். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னரே, புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு இடம் பெறும் என்றார்.