5 பேரை கொலை செய்த வாலிபன்

ByEditor 2

Feb 25, 2025

இந்தியா – கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உடன் பிறந்த தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை என்ற பகுதியை சேர்ந்தவர் முகம்மது ரஹீம். இவரது மனைவி ஷெமி. இவர்களுக்கு 23 வயதில் அஃபான், 15 வயதில் அப்சான் என இரண்டு மகன்கள் உள்ளனர். முகம்மது ரஹீம் துபாயில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஃபான் வேலை தேடி துபாய்க்கு சென்ற நிலையில், அவருக்கு வேலை கிடைக்காதால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். அஃபான் அதே பகுதியைச் சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திங்கள் அன்று இரவு 7 மணியளவில் வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்திற்கு சென்ற அஃபான், 6 பேரை கொலை செய்து விட்டதாகவும், 3 வீடுகளில் அவர்களின் உடல்கள் இருப்பதாகவும் கூறி, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.  உடனே அவரை கைது செய்த போலீசார், அஃபான் தெரிவித்த பாங்கோடு, பேருமலை, சுள்ளால் ஆகிய இடங்களில் உள்ள மூன்று வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 5 பேர் கத்தியால் குத்தப்பட்டும், சுத்தியலால் அடிக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. அஃபான் தன்னுடைய காதலி பர்சானாவை இரு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தன்னுடைய வீட்டில் வைத்து தாய் ஷெமி, காதலி பர்சானா மற்றும் தம்பி அப்சான் ஆகியோரை தலையில் சுத்தியலால் கொடூரமாக தாக்கி இருக்கிறார் அஃபான். இதில், காதலி பர்சானா மற்றும் தம்பி அப்சான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து அருகிலுள்ள பாங்கோடு என்ற இடத்தில் வசிக்கும் தன்னுடைய தந்தையின் அம்மாவும், தனது பாட்டியுமான சல்மா பீவியின் வீட்டிற்கு சென்றுள்ளார் அஃபான். வீட்டிற்குள் நுழைந்த மறுவிநாடியே 88 வயதான சல்மா பீவியை சுத்தியலால் அடித்தே கொலை செய்து இருக்கிறார். மூன்று பேரை கொன்ற பிறகும் கொலை வெறி அடங்காத அஃபான், அருகிலுள்ள சுள்ளால் பகுதிக்கு சென்று பெரியப்பா லத்தீப் மற்றும் அவரது மனைவி ஷாகினா ஆகியோரையும் சுத்தியல் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார். அஃபானின் இந்த கொடூர தாக்குதலில் அவரது தாய் ஷெமி தவிர மற்ற 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

தாக்குதலில் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஃபானின் தாய் ஷெமியை போலீசார் மீட்டு வெஞ்ஞாரமூட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காதலி உட்பட பலரை கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்துக்கு வந்து சரண் அடைந்த அஃபான், தான் எலி விஷம் சாப்பிட்டதாக சொல்லி காவல் நிலையத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்து விட்டார். கொலையாளி அஃபானை போலீசார் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 5 கொலைகள் செய்த அஃபான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கூடுதல் விவரங்களை போலீசாரால் சேகரிக்க முடியவில்லை.

போதைக்கு அடிமையான அஃபான், இந்த கொலைகளை செய்து, தானும் தற்கொலை செய்ய முயன்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி, உடன் பிறந்த தம்பி உட்பட 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *