அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வெண்ணிற ஈ நோய்த் தாக்கம் காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னம் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக தென்னை மரங்களில் அத்துப் பூச்சியிலும் சிறியதான வெள்ளை நிறமுடைய பூச்சிகள் அவற்றின் ஓலைகளின் உட்புறத்தில் தொற்றியிருந்தது கொண்டு நோய் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஓலைகள் கறுப்பு நிறமடைந்து படிப்படியாக தென்னை மரம் அழிந்து போகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நோய்த் தாக்கமானது உயர்ந்த மரங்களில் மட்டுமல்லாது இளந் தென்னம் பிள்ளைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இத்தொற்றானது, பொத்துவில், ஒலுவில், நிந்தவூர், அட்டப்பள்ளம், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, தம்பிலுவில், திருக்கோவில் மற்றும் தீகவாபி பகுதிகளில் காணப்படுகின்ற தென்னைகள் அனைத்தையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு வகையான கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் தெளித்தும் இதுவரைக்கும் நோய்த் தாக்கம் குறையவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தென்னையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு,அதனால் கிடைத்து வந்த வருமானமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, விவசாய அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட தென்னை பயிர்ச் செய்கை அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தி, வெண்ணிற ஈ நோயைக் கட்டுப்படுத்தி தருமாறு தென்னந் தோட்ட உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
