அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது நண்பரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் ஆகியோர் ஜேர்மன் அரசியலில் தலையிட, தற்போது, ஜேர்மன் அரசியலின் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் எதிரொலித்துள்ளது.
ஆம், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு எதிரான ஜேர்மன் மக்கள் மட்டுமல்ல, சுவிஸ் மக்களும் தெருக்களில் இறங்கி பேரணி நடத்தத் துவங்கியுள்ளார்கள்.
ஆம், சனிக்கிழமை மாலை, சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்திலுள்ள Einsiedeln என்னுமிடத்தில், சுமார் 250 சுவிஸ் நாட்டவர்கள், ஜேர்மனியின் AfD கட்சித் தலைவரான ஆலிஸ் வீடலுக்கு (Alice Weidel) எதிராக பேரணியில் இறங்கியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஜேர்மனியிலுள்ள Überlingen என்னுமிடத்தில் ஆலிஸ் வாழ்ந்து வந்தாலும், 2018 முதல், சுவிட்சர்லாந்திலுள்ள Einsiedelnஇல், இலங்கை பின்னணி கொண்டவரான தனது துணைவி (இலங்கையில் தத்தெடுக்கப்பட்ட பெண். தற்போது 42 அவயது) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆகவேதான், அந்த இடத்தில் சுவிஸ் நாட்டவர்கள் பேரணி நடத்துகிறார்கள். ’ஆலிஸ் வெளியேறு’ என்கிறது ஒருவர் கையிலுள்ள பதாகை.
ஆலிஸின் பிள்ளைகள் மட்டும் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பாக வளரும் சூழல் இருக்கும் நிலையில், ஜேர்மன் அரசியலில் குழப்பம் உண்டாக்கும் கொள்கைகளை பின்பற்றுகிறார் ஆலிஸ் என்கிறார் பேரணியில் பங்கேற்ற ஒருவர்.
இதற்கிடையில், இந்த பேரணிக்கெதிராக மற்றொரு கூட்டம் குரல் எழுப்ப, உடனடியாக அதைத் தடுத்து, கலவரம் ஏற்படாமல் தடுத்திருக்கிறார்கள் பொலிசார்.