வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2024 ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் மீது பொது மக்களுக்கு காணப்படும் அங்கீகாரம் அதிகரித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் (55%) இலங்கை பொருளாதாரமானது ‘மேம்பட்டுள்ளதாக’ சிந்திக்கின்றனர்.
எனினும் மக்கள் தொகையில் 47 வீதமானவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமையானது தற்போதும் ‘மோசமான நிலைமையிலேயே’ காணப்படுவதாக உணர்கின்றனர்.
இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் பதிவான 71 வீதத்தைவிடக் குறைவாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 2024 ஜூலை மாதத்திலிருந்து 2025 பெப்ரவரி வரையான காலப்பகுதியில், அங்கீகாரம் வழங்காத மக்கள் தொகை 60 வீதத்திலிருந்து 16 வீதமாகக் (44 புள்ளிகள் குறைவு) குறைவடைந்துள்ளது.
மேலும் இலங்கையின் பொருளாதாரமானது வீழ்ச்சிப்போக்கினை கொண்டுள்ளது என்ற நிலைப்பாட்டினை கொண்ட மக்களின் தொகையானது 65 வீதத்திலிருந்து 14 வீதமாகக் (51 புள்ளிகள் குறைவு) குறைவடைந்துள்ளது.
“தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?” என்ற கேள்விக்கு, பதிலளித்தவர்களில் 62% பேர் அதை ‘அங்கீகரிப்பதாகக்’ கூறினர், இது முன்னைய 24 வீதத்திலும் பார்க்க இரண்டு மடங்கிற்கும் அதிகம். பதிலளித்தவர்களில் 16% பேர் மாத்திரம் இதை ‘அங்கீகரிக்க மறுத்தனர்’. இது முன்னைய ஆய்வில் 60 வீதமாக இருந்தது.
“ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரமானது முன்னேற்றமடைகிறதா அல்லது மோசமான நிலைக்கு செல்கிறதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த மக்கள் தொகையில் 55 வீதமானோர் ‘முன்னேற்றமடைகிறதாகப்’ பதிலளித்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்த கணிப்பீடானது 30 வீதமாகப் பதிவாகியிருந்தது. இலங்கையின் பொருளாதாரமானது ‘மோசமான நிலைக்குச் செல்வதாக’ 14% பேர் மாத்திரமே கூறியுள்ளனர். இது முன்னர் 65 வீதமாக இருந்தது.
இலங்கையின் பொருளாதார நிலவரமானது ‘நல்ல நிலை’ அல்லது ‘சிறந்த நிலை’ அல்லது ‘மோசமான நிலையினைக்’ கொண்டுள்ளதா என மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்ட போது 35 வீதமானோர், பொருளாதாரமானது ‘நல்ல நிலை’ அல்லது ‘சிறந்த நிலைமையை’ கொண்டுள்ளது என தரப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 2024 ஆம் ஆண்டு 28% ஆகக் காணப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதனிடையே, இலங்கையின் பொருளாதாரமானது வீழ்ச்சியான போக்கினையே கொண்டுள்ளது எனவும் ‘மோசமான நிலையில்’ காணப்படுவதாகவும் 47% பேர் தரப்படுத்தியுள்ளனர். முன்னைய ஆய்வில் குறித்த பெறுபேறானது 71% ஆகக் காணப்பட்ட நிலையில் தற்போது 24% ஆகக் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கணிப்பினை செயல்படுத்தல்:
வெரிடே ரிசர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு (Syndicated Surveys) கருவியின் ஒரு பகுதியாக இக் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்புக்கான பங்காளர் வான்கார்ட் சர்வே (பிரைவட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd) ஆகும். இச்செயற்கருவி இலங்கையர்களின் உணர்வுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.
நாடளாவிய ரீதியில் தனித்தனி குடும்பங்களில் இருந்து வயது வந்த இலங்கையர்கள் 1,050 பேரைக் கொண்ட பல கட்ட சமவாய்ப்பு பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் 2025 பெப்ரவரி 5 ஆம் திகதி வரை இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இக்கருத்துக்கணிப்பு 95% நம்பிக்கை இடைவெளியில் ±3.0% அதிகபட்ச மாதிரி பிழைவரம்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்படுத்தும் செயன்முறையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளால் இப்பிழைவரம்புகள் மேலும் பாதிக்கப்படலாம்.