கீர்த்திமிக்க எதிர்காலத்திற்கு புத்தாக்கம் மிகவும் முக்கியமானது – பிரதமர்

ByEditor 2

Feb 23, 2025

கீர்த்திமிக்க எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற உரையாடலில் புத்தாக்கம் என்பது மிகவும் முக்கியமான தலைப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு புத்தாக்க தீவு உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவை தளமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனமான ஒப்சர்வர் ஆராய்ச்சி நிறுவனமும் கெப்பிட்டல் மகாராஜா குழுமமும் இணைந்து நடத்திய “புத்தாக்க மாநாடு 2025” பெப்ரவரி 20, 21 ஆகிய திகதிகளில் கொழும்பு ITC ரத்னதீப ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகின் 50 நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

உலகம் இன்று ஒரு தீர்க்கமான கட்டத்தில் உள்ளது. காலநிலை மாற்றம், பொருளாதார ஸ்திரமின்மை, தொழில்நுட்ப சீர்குலைவுகள் மற்றும் புவி அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் சவால்களுடன் வாய்ப்புகளும் வரவேசெய்கின்றன. இந்த மாநாடும் அத்தகைய ஒரு வாய்ப்புதான். எங்களைப் போன்ற தீவு நாடுகளுக்குத் தனித்துவமாகப் பொருந்தும் தீர்வுகளை உருவாக்க இது எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

புத்தாக்கத்தின் மூலம், புதிய திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன, இது ஏற்கனவே உள்ள முறைகளை சவாலுக்குட்படுத்தக்கூடியது. இலங்கை ஒரு மாற்றத்திற்கு தயாராகி வரும் நிலையில், இந்த தனித்துவமான தருணத்தில் புத்தாக்கம் என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டை நடத்துவதற்கு இலங்கையை தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது. குறிப்பாக இது இலங்கையில் எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் தருணம்.

நாம் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறோம். இலங்கையர்களாகிய நாம் கடந்த கால மகத்துவம், எமது வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி நீண்ட காலமாக பேசி வருகின்றோம். நிச்சயமாக நமது வரலாற்றில் பெருமைப்படுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. பண்டைய நீர்ப்பாசன முறைமைகள், கட்டிடக்கலை, சமய நினைவுச்சின்னங்கள், இலக்கியம், கலை போன்றவை உள்ளன. நாம் 2500 ஆண்டுகள் பின்னோக்கி சென்று எமது கீர்த்திமிக்க கடந்த காலத்தைப் பற்றி பேசலாம். நமது நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரான உங்களை, எமது பாரம்பரியத்தை பார்வையிட சிறிது காலம் செலவிட நான் உங்களை அழைக்கிறேன். எங்களது இந்த சிறிய தீவில் பார்க்கவும் அனுபவிக்கவும் நிறைய இருக்கிறது.

ஆனால். இன்று நாம் கீர்த்திமிக்க எதிர்காலத்திற்கான எமது இயலுமையைப் பற்றி பேசுகிறோம். அதை எப்படி செய்வது என்பது பற்றிய உரையாடலில் புத்தாக்கம் என்பது ஒரு முக்கியமான தலைப்பு. ஆனால் புத்தாக்கத்தில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது. அர்த்தபூர்வமான ஒரு மாற்றத்திற்கான ஊக்கி என்ற அர்த்தத்திலேயே நான் புத்தாக்கத்தைப் பற்றி பேசுகிறேன்.

இது தொழில்நுட்பம் அல்லது விஞ்ஞானத்தைப் பற்றியது மட்டுமல்ல. நமக்கு புதிய சிந்தனைகள், கருத்துக்கள், மாதிரிகள், புதிய சிந்தனை தேவை. ஏன் சில பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை புதிய கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவின் ஒப்சர்வர் ஆய்வு மன்றத்தின் தலைவர் சமீர் சரண் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *