அமீரக அரசு பலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்களை காஸாவுக்கு எடுத்துச் சென்று விரைவாக பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
டுபாய் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து பலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிறப்பு கப்பல் எகிப்து அல் அரீஷ் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நிவாரணப் பொருட்களை காஸாவுக்கு எடுத்துச் சென்று விரைவாக பலஸ்தீன மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது குறித்து அமீரக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“காஸா பகுதியில் வசித்து வரும் மக்கள் இஸ்ரேல் நாட்டின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் போர் நிறுத்தம் காரணமாக தற்போது அமைதி நிலை திரும்பி உள்ளது. போர் நின்றாலும் இன்னும் பெரும்பாலோர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
அமீரக ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சிவர்ல்ரஸ் நைட் 3 என்ற திட்டத்தின் கீழ் டுபாயின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20ஆந் திகதி 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்களை சிறப்பு கப்பல் மூலம் பலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கப்பலில் பலஸ்தீன மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், பெண்களுக்கான சுகாதார பொருட்கள், உடைகள், சிறுவர், சிறுமிகளுக்கான பொருட்கள், போர்வைகள், தங்குவதற்குரிய முகாம்கள் அமைப்பதற்கான பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து அனைத்துவிதமான மனிதாபிமான உதவிகளையும் வழங்க அமீரக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.