நயவஞ்சகத்துடன் எவரும் செயற்பட வேண்டாம் – தலதா

ByEditor 2

Feb 7, 2025

இரு பெரும் தேர்தல் தோல்விகளின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளவிருக்கின்றோம். எனவே இரு கட்சிகளினதும் இணைவு அத்தியாவசியமானதாகும். அதனை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும் செயற்பட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பாடத போதிலும், அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐ.தே.க. சார்பில் அனைவரும் நேர்மறையாகவே இவ்விடயத்தை அணுகிக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தில் எமது தரப்பில் ஒரேயொருவர் மாத்திரமே இருப்பதாகவும், மறுபுறம் 40 பேர் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

அந்த வகையில் நாம் ஒரு அடியைப் பின்னால் வைத்தேனும் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எவ்வாறிருப்பினும் மறுபுறத்தில் ஒரு சிலர் சில பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவோர் இணைந்து செயற்பட வேண்டும் என்ற இலக்குடனேயே செயற்படுகின்றனர். உத்தேச உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இரு பெரும் தேர்தல் தோல்விகளின் பின்னர் இந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளவிருக்கின்றோம். எனவே இந்த பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் எண்ணத்தில் எவராவது நயவஞ்சகத்துடன் செயற்பட்டால் அந்த எண்ணத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அனைவரும் ஒன்றிணைவோம். அவ்வாறில்லை என்றால் இது தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எட்டவேண்டியேற்படும்.

இருகட்சி தலைவர்களும் சந்திக்க முன்னர் பேச வேண்டிய விடயங்கள் பல உள்ளன. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். எமது இறுதி இலக்கு சகல தேசிய தேர்தல்களாகும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *