வைரலாகும் சிறுவன்

ByEditor 2

Feb 6, 2025

கடந்த இரண்டு நாட்களாக அரபுலக சமூக ஊடகங்களில் 12 வயது யமனிய அனாதைச் சிறுவன் ஸக்ர் உடைய கதை சூடு பிடித்திருக்கிறது.

தென் ஸவூதி தெருக்களில் யாசகம் கேட்கும் யமன் தேச பெண்கள் சிறார்களுக்கு மத்தியில் இந்த சிறுவனைக் கண்ட நல் உள்ளம் படைத்த ஒரு சமூக ஊடகவியலாளர் இளைஞர் அவனது கதையை கேட்டு பதிவு செய்கிறார்..

சிறுவன் அழுதபடி தந்தை குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்  தாய் தனது உறவுகளின் தயவில் நோய் வயப்பட்டிருக்கிறார்..

அவரது உறவுகளில் சிலர் என்னை ஸவூதியில் யாசகம் கேட்கவென ஒரு சிலரிடம் பாரப்படுத்தி விட்டனர்..

எம்மை இங்கு கடத்தி வந்து வைத்திருப்பவர்கள் தினமும் என்னை பாதைகளில் விட்டு விடுகின்றனர், காசுடன் திரும்பாவிட்டால் தாக்குகின்றனர் என அழுதபடி கூறுகிறான்.

சரி, இப்போது உனக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என கேட்ட போது,

நான் தாயாரை பார்க்க வேண்டும் அவருக்கு வைத்தியம் செய்ய வேண்டும், எங்களுக்கு இருக்க வீடு வேண்டும் என்று கசறுகிறான்..

ஊடகவியலாளரும் மனனமுருகி அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு தம்பி அழாதே நீ ஒரு ஆண் பிள்ளை உனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என ஆறுதல் கூறுகிறார்.

ஊடகவியலாளர் பதிவேற்றிய சிறிது நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பின்னூட்டங்களை இடுகிறார்கள்..

பலர் அவனுக்கு உதவ முன் வருகிறார்கள், அதில் ஸவூதி வர்த்தகர் ஒருவர் யமன் தலைநகர் ஸன்ஆவில் அவர்களுக்கு தளபாடங்களுடன் ஒரு தொடர்மாடி வீட்டை ஏற்பாடு செய்கிறார், மற்றுமொருவர் அவர்களுக்கு ஒரு வாகனத்தை அன்பளிப்பு செய்கிறார், பலரும் பண உதவி செய்ககிறார்கள்.

ஸவூதி வாசனை பொருட்கள் வர்த்தகர் இளவரசர் ஒருவர் தனது ஒரு உற்பத்திப் பொருளுக்கு ஸக்ர் என பெயரிட்டு அதில் வரும் வருவாயை அவனுக்கு தருவதாக பங்குதாரராக ஆக்கிக் கொள்கிறார்.

கதை எமது உள்ளத்தையும் தொடுகிறது, நல்ல உள்ளங்கள் வாழுகின்றன..

என்றாலும் இந்த ஸக்ர் போன்ற பல்லாயிரக்கணக்கான அனாதைச் சிறுவர்கள் மற்றும் அவரது தாய் போன்ற விதவைகள் யமன் இராக் சிரியா பலஸ்தீன் கஷ்மீர், மியன்மார், உய்குர் போன்ற நாடுகளில் நாடற்றவர்களாக வீடற்றவர்களாக நாதியற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் மீது யுத்தம் திணிக்கப்பட்டிருக்கிறது..

உலகெங்கும் அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு அகதிகளாகவும் இடம் பெயர்ந்தவர்களாகவும் பல இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சோகக் கதை இருக்கிறது..

சமூக ஊடகங்களில் ஓரிருவர் ஒருசிலரது கதைகளை பதிவேற்றும் வரை உலகம் அவர்களை கண்டு கொள்வதில்லை..!

சமூக அவலங்களை தமக்கு மூலதனமாக்கிக் கொள்ளும்  ஆட் கடத்தல் காரர்கள், அரசியல் வாதிகள் போல்  சில சமூக ஊடகவியலாளர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

சொல்வதற்கு ஆயிரம் இருந்தாலும், வார்த்தைகள் இல்லை, எழுதியும் பேசியும் பயனூமில்லை,  இன்ஷா அல்லாஹ்

இருக்கின்ற இடத்தில் இருந்து நாம் சில எட்டுக்களை முன் நகர்த்துவோம்!

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *