ருமேனியாவில் வேலைவாய்ப்புக்கான விசாக்களை வழங்குவதில் ஏற்படும் அதிகப்படியான தாமதங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் அண்மையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ளது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தலையீட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ருமேனிய தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
ருமேனியாவில் வேலைவாய்ப்புகளுக்காக இலங்கை தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட 164 வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இதில் பங்கேற்றன.
ருமேனியாவில் பல்வேறு துறைகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதுடன், அந்த வேலை வாய்ப்புகளுக்கான விசாக்களுக்கு விண்ணப்பிப்பதில் அதிக தாமதங்கள் ஏற்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள், பணியகத்திற்குத் தெரிவித்துள்ளன.
அதன்படி, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் தலையீட்டின் மூலம் இந்த விடயம் குறித்து ருமேனிய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் விசா பெறுவதற்காக நடத்தப்பட்ட நேர்காணலில் தோல்வி ஆகியவை விசா தாமதத்திற்குக் காரணம் என்று தூதரகம் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த கலந்துரையாடலின் விளைவாக, விசா விண்ணப்பங்களுடன் ஆவணங்களை சரியாக சமர்ப்பிப்பது மற்றும் நேர்காணலின் போது ஆங்கிலத்தில் சரியான பதில்கள் வழங்குவது குறித்து இங்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் விசா தாமதங்கள் குறைக்கப்படும் என்று பணியகம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
விசா விண்ணப்பதாரர்கள் நேர்காணல்களுக்கு செல்வதற்கு முன்னர் ஆங்கிலத்தில் சரியான பதில்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விசேட செயலமர்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.