சேனாதிராஜா காலமானார்

ByEditor 2

Jan 30, 2025

யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா தமன உறவுமுறை ‘பவானி’ என்பவரை திருமணம் செய்தார்.

மேலும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவரான சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (29) காலமானார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிறு அன்று மாவிட்டபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பிரவேசம்…

மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1989 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ) – 2,820 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.
2000 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ ) – 10,965 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2001 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (தவிகூ) – 33,831 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2004 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் – (ததேகூ) – 38,783 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,501 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2015 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (ததேகூ) – 58,782 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,358 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *