24 ஆயிரத்தை கடந்த சுற்றிவளைப்புக்கள்

ByEditor 2

Jan 26, 2025

2024 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகார சபை 24,761 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளது.

இதன்போது 23,953 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் முடிக்கப்பட்ட வழக்குகளுக்கு நீதவான் நீதிமன்றங்கங்களால் 207 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தாக்கல் செய்யப்படாத சோதனைகளுக்கு உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்புக்களின் போது, ​​அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களின் விபரங்களைக் குறிப்பிடாதது, தகவல்களை மாற்றுவது, குறிக்கப்பட்ட விலையை மாற்றுவது மற்றும் வேறு விலையைக் குறிப்பிடுவது, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, மின் சாதனங்களுக்கு உத்தரவாதக் காலத்தை வழங்காதது, இருப்புகளை மறைத்து வைத்திருத்தல், உரிய பற்றுச்சீட்டு வழங்காமை உள்ளிட்ட  நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தை மீறிய வர்த்தகர்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

அத்துடன் உணவு, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களை உள்ளடக்கி இந்த சோதனைகள் நடத்தப்பட்டதுடன், இதில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் அரிசி (3114 சோதனைகள்), பாண் (1624 சோதனைகள்) மற்றும் பிஸ்கட் (1086 சோதனைகள்) ஆகியன தொடர்பில் நடத்தப்பட்டன.

இந்த சோதனைகளின் போது, ​​பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், மருந்து கடைகள், தைத்த ஆடைகள் வர்த்தக நிலையங்கள், கையடக்க தொலைபேசி மற்றும் மின் சாதன கடைகள், கட்டுமானப் பொருட்கள் கடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கடைகள் ஆகியவை பிரதானமாக சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டதுடன், அதிக சோதனைகளை நடத்திய மாவட்டங்களில் முக்கியமாக குருநாகல், கம்பஹா, கண்டி, கேகாலை, புத்தளம், அனுராதபுரம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை ஆகியவை அடங்கியுள்ளதுடன், அந்த ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆண்டு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் குருநாகல் மாவட்டத்திலேயே கடந்த ஆண்டில் 2282 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் அளித்த முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவும், நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனை செய்யவும், உளவாளிகள் மூலம் வர்த்தகர்கள் செய்த தவறுகளைக் கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *