காதலனை கொன்ற, காதலியின் தாய்

ByEditor 2

Jan 25, 2025

இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் காதலனை கொன்று விபத்து என நாடகமாடி காதலியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மராட்டிய மாநிலம், புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது25) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முச்சக்கரவண்டி சாரதிகள் இருவர், பாலாஜி விபத்தில் சிக்கியதாக கூறி வைத்தியசாலைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலாஜி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அவரை அழைத்து வந்த முச்சக்கரவண்டி சாரதிகளை பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கொலைசெய்யப்பட்ட பாலாஜி, காதலியான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதன் காரணமாக சிறுமி மனஉளைச்சல் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய், பாலாஜியை கொலை செய்ய சதி திட்டம் போட்டார். கடந்த 17ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த பாலாஜியை சிறுமியின் தாய் குறித்த இரு முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட 4 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பாலாஜியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அவர் விபத்தில் சிக்கியதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து பொலிஸார் சிறுமியின் தாய், முச்சக்கரவண்டி சாரதிகள் 2 பேரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மற்றவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *