மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

ByEditor 2

Jan 23, 2025

ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மருதமுனை பகுதியில் களவாடி, சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய  வருகை தந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (22) இடம்பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் சந்தேக நபர்கள் வசம் இருந்து அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று ஆடுகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி மூன்று ஆடுகள் மற்றும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய செயற்பட்ட சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட  நிலையில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு பின்பகுதியில் 21 வயதுடைய சந்தேக நபரை கைது செய்தனர். பின்னர் கைதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் போது மற்றுமொரு சந்தேக நபரான 34 வயதுடையவர் சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கு அருகாமையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மேலும் இரு சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட மூன்று ஆடுகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 4,790 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *