வெள்ளவத்தையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதிக்கு முன்பாக பெண் ஒருவர் கடத்தப்பட்டதைக் காட்டும் காணொளி தொடர்பில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடந்த இந்த கடத்தல் சம்பவத்தில், அந்தப் பெண் பொலிஸ் சீருடையில் இருந்த ஒருவர் உட்பட இரண்டு நபர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப விசாரணை
கடத்தல் தொடர்பான ஆரம்ப விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடத்தல்காரர்கள் குறித்த பெண்ணிடம் பணம் உள்ளிட்ட பொருட்களை பெற்று, பின்னர் வெலிக்கடை பகுதியில் விட்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் வாடகைக்கு எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
குற்ற செயலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
