மின் கட்டணத்தை 33% ஆல் குறையுங்கள் – சஜித் பிரேமதாச

ByEditor 2

Jan 22, 2025

நாட்டின் பல்வேறு துறைகளில் மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ உருவாக்கும் பயணம் தொடர்பில் இன்று (22) பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு முன்வைத்தார். 

அவையாவன,

வாக்குறுதியளித்த மின் கட்டணத்த 33% ஆல் குறையுங்கள்,

மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார். 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபையும் கூறியது. பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு 20% ஆல் மின்சார கட்டணத்தை குறைத்தது. இதற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் தேவை என்கின்றனர். எனவே தற்போது இதனை 20% ஆல் குறைப்பதோடு, தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை 33% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மக்களின் வாழும் உரிமையை பாதுக்க வேண்டும்,

கொலைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை, கடத்தல் அதிகரித்துள்ளன. தரவுகளின் அடிப்படையில் 2024 இல் 121 துப்பாக்கிச் சூடுகளும் 60 கொலைகளும் நடந்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசின் பொறுப்பாகும்.

கடவுச்சீட்டுப் பிரச்சினையை தீர்க்கவும்,

கடவுச்சீட்டுப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதற்கு நிகழ்நிலை முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், நிகழ்நிலை முறையிலான விண்ணப்பங்களுக்கும் வரிசைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு விரைவான தீர்வுகள் அவசியம். 

தேங்காய் எண்ணெய் இறக்குமதி பிரச்சினைக்குத் தீர்வு தேவை,

தேங்காய் எண்ணெய் இறக்குமதி விடயத்தில் 2024 ஜனவரி முதல் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டன. சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யும் போது 18% பெறுமதி சேர் வரியும் 2.5% சமூக பாதுகாப்பு வரியும் விதிக்கப்பட்டாலும், இவ்வாறு சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து பின்னர் சுத்திகரித்து சந்தைப்படுத்துவதில் அரசுக்குச் சேர வேண்டிய வரிகள் கிடைக்கவில்லை. இது 5 பில்லியனாக ரூபாவாக காணப்படுகின்றன. இது தொடர்பில் தீர்வு காணப்பட வேண்டும்.

துறைமுகத்தில் நிலவிவரும் கொள்கலன் நெரிசல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை,

துறைமுகத்தில் கொள்கலன் அகற்றும் பணி துரிதமாக இடம்பெறாமையினால்,  கொள்கலன் தாங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏராளமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளன. இன்னும் 4,000 கொள்கலன்கள் இங்கு காணப்படுகின்றன. இதற்கு அரசாங்கம் அவசர தீர்வுகளை காண வேண்டும். 

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பிற்கு வழங்கப்படும் 15% வட்டியை மீள வழங்கல்,

சிரேஷ்ட பிரஜைகள் தமது சேமிப்பிற்கு பல்வேறு அரசாங்கங்களின் கீழ் 15% வட்டியை பெற்று வந்தனர். ஆனால் 2022 முதல் அதை அது குறைக்கப்பட்டு தற்போது 7-8% வட்டி விகிதத்தை பெற்று வருகின்றனர். இந்த 15% வட்டி விகிதம் திரும்ப வழங்கப்பட வேண்டும்.

சஃபாரி ஜீப் நடத்துநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுங்கள்,

பஸ் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சுற்றுலாத் துறை மற்றும் தேசிய பூங்காக்களில் சஃபாரி ஜீப் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ஏராளமானோர் வருமானம் பெறுகின்றனர். எனவே, இந்த ஜீப் வண்டிகள் விடயத்தில் உரியவாறு நடந்து கொள்ளுங்கள். 

முச்சக்கர வண்டிகள் மற்றும் பஸ்களின் தேவையற்ற உதிரிப் பாகங்கள் அகற்றப்பட்ட போதிலும் அதே சட்டம் இந்த ஜீப் வண்டிகள் மீதும் பிரயோகிக்கப்படக் கூடாது. இது சுற்றுலாத்துறைக்கு தேவையான ஒரு வண்டியாகும். 

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்குங்கள்,

ஏறக்குறைய 45,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுங்கள். ஆளும் தரப்பின் தேர்தல் வாக்குறுதிகளில் இது ஒரு முக்கிய முன்மொழிவாக இருந்ததால் இந்த பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுங்கள். 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளனர். 

ஆசிரியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இத்தரப்பினர்கள் பெரும் தியாகங்களைச் செய்தனர். இவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுங்கள். இத்தரப்பினர்கள் கடந்த காலங்களில் தமது போராட்டத்தின் போது கூட பிரச்சினைகளை எதிர்கொண்டதால், இந்த விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள். 

கல்வியற் கல்லூரி மற்றும் தாதி பயிலுநர் பயிற்சியில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள்,

கல்வித் துறையில் 706 வெற்றிடங்களை நிரப்ப வர்த்தமானி வெளியிடப்பட்டு பரீட்சைகள் நடைபெற்றன. அவர்கள் இன்னும் ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், முடிவுகளை விரைவில் வெளியிட்டு, உரிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும். மேலும் கல்வியற் கல்லூரி மற்றும் தாதி பயிலுநர் பயிற்சியில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள். அடுத்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுங்கள். கல்வியற் கல்லூரிகள் ஊடாக பட்டம் வழங்கும் திட்டத்தை முன்னெடுங்கள்.

கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணுங்கள்,

கிராம உத்தியோகத்தர்களின் சேவை பிரமாணக் குறிப்பு, கொடுப்பனவுச் பிரச்சினை, அஸ்வெசும நிவாரணத் திட்டப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் பெரும் பணிகளைச் செய்யும் கிராம உத்தியோகத்தர்களின் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

மக்கள் எதிர்நோக்கும் மேற்கூறிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன, இந்த பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.  எனவே முற்போக்கான தீர்வுகளை வழங்குங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *