இலங்கைக்கு சவுதி அரேபியா அளித்துவரும், ஆதரவிற்கு சபாநாயகர் நன்றி தெரிவிப்பு

ByEditor 2

Jan 21, 2025

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்கஹ்தானி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

சபாநாயகருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் அல்கஹ்தானி அவர்கள், இந்த ஆண்டு இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது எனச் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், இலங்கையின் பல்வேறு துறைகளில் அபிவிருத்திக்கான சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை அவர் இதன்போது வலியுறுத்தினார்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கைக்கு சவுதி அரேபியா அளித்து வரும் நீண்டகால ஆதரவிற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை சபாநாயகர் பாராட்டியதுடன் இலங்கையின் விவசாயம், தொழில்துறை மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதில் சவுதி அரேபியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். 

பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பிலும்  சபாநாயகர் தெரிவித்தார்.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் வெளிநாட்டு முதலீடு, மற்றும் வலுசக்தித் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் இதன்போது மேலும் கவனம் செலுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *