மும்பையில் பல கோடி ரூபாய் முதலீட்டு மோசடி

ByEditor 2

Jan 15, 2025

பல கோடி முதலீட்டு மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நகையக உரிமையாளர்கள், இலங்கையிலும் தமது மோசடியை விஸ்தரிக்க திட்டமிட்டதாக  மும்பை (Mumbai) பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இதன்படி அவர்கள் இலங்கையில் தமது அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டிருந்தனர் என்று மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நகையகத்தை நடத்தி வந்த பிளாட்டினம் ஹெர்ன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு வெளிநாட்டினர் உட்பட மூன்று பேர், 2025 ஜனவரி 7ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோசடி குற்றச்சாட்டுக்களை சமர்ப்பிப்பு

இந்தநிலையில், குற்றச்சாட்டுக்களின் பேரில், தேடப்படும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தௌசிப் ரியாஸ் என்கிற இந்தியரான ஜோன் கார்ட்டர் மற்றும் உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த ஒலேனா ஸ்டோயன் (33) ஆகிய இருவரும், தமது அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்காக அங்கு சென்று திரும்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை வரை, 3,700 முதலீட்டாளர்கள் குறித்தவர்கள் தொடர்பில் மோசடி குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதன்படி மோசடி செய்யப்பட்ட தொகை 57 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

முன்னதாக, கடந்த திங்களன்று, அதிகாரிகள், குறித்த நகையகத்தின் அலுவலகத்தை சோதனை செய்து, 14 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 21 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள், முதலீட்டு ஆவணங்கள் உட்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மோசடி தொடர்பில் இந்திய நாட்டவரான ரியாஸ் மற்றும் இம்ரான் ஜாவேத், துருக்கிய நாட்டவரான முஸ்தபா கரகோக், உக்ரைனிய நாட்டவர் ஸ்டோயன் மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் விக்டோரியா கோவலென்கோ உட்பட 11 பேர் தேடப்படுவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *