சிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு

ByEditor 2

Dec 31, 2024

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிகாரமளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *