புதுடில்லியில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக நேற்று வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.
டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், தற்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(டிச. 28) முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்று மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, மன்மோகன் சிங் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.முன்னதாக, மன்மோகன் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.