மாவனல்ல, ஹெம்மாதகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷைக் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் சவுதி அரேபியாவின் ரியாத் அல் இமாம் முஹம்மத் பின் சஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி (பி.ஏ), முதுகலைமாணி (எம்.ஏ), மற்றும் பி.எச்.டி வரை உயர் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் மௌலவிப் பட்டம் பெற்ற இவர், அல் இமாம் முஹம்மத் பின் சஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வியைத் தொடர்ந்தார். இவர் ரியாத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்த காலங்களில் அங்குள்ள தஃவா நிலையங்கள் ஊடாக தஃவா பணிகளிலும் சிறப்பாக ஈடுபட்டார்.
கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ள முஹம்மது ரிஸ்மியை கௌரவிக்கும் நிகழ்வொன்றை இத்திஹாதூல் அப்பாஸிய்யீன் எனும் அமைப்பு ரியாத் அல்மாஸ் ஹோட்டலில் (24.12.224) ஏற்பாடு செய்து நடாத்தியது. இந்நிகழ்வில் இலங்கையின் அல் இஹ்ஸான் நலன்புரி அமைப்பின் தலைவரும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான அஷ்ஷைக் பத்ஹுர்ரஹ்மான் பஹ்ஜி, இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷைக் தீனுல் ஹசன் பஹ்ஜி, இப்னு அப்பாஸ் அரபிக் கல்லூரி ஆசிரியர் அஷ்ஷைக் அதாஉல்லாஹ் பஹ்ஜி, இலங்கை அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் ஷைஹுத்தீன் மதனி, இலங்கை தகாதுப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் இஸ்ஹாக் அப்பாஸி ரியாத் மாநகரில் தஃவா மற்றும் அழைப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அஷ்ஷைக் மப்ஹூம் பஹ்ஜி அஷ்ஷைக் ளபருள்ளாஹ் பஹ்ஜி அஷ்ஷைக் ரிப்லான் பஹ்ஜி உட்பட இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.