பிரிக்ஸ் இணைய இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

Byadmin

Dec 25, 2024

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக ர‌ஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர இலங்கை உட்பட 35 நாடுகள் விண்ணப்பித்திருந்தன.பிரிக்ஸ் அமைப்பில் சேர தமது விருப்பத்தை வெளிப்படுத்திய கடிதமொன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் அனுப்பியிருந்தது.

என்றாலும், விண்ணப்பித்த 35 நாடுகளில் 9 நாடுகளை மாத்திரமே இணைத்துக்கொள்ள கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.“மாநாட்டின் நோக்கம் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவடையச் செய்வதாகும். அது தற்போது வெற்றிகரமாக நடந்துள்ளது. இணைக்கப்படும் புதிய நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் அனுப்பட்டுள்ளன.” என்று ர‌ஷ்ய அதிகாரி யூரி உ‌‌ஷகோவ் தெரிவித்துள்ளனர்.

மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பெலருஸ், பொலிவியா, கியூபா, உகாண்டா, கசக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டமைப்பில் சேர ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதனையடுத்து, வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர மேலும் நான்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் அமைப்பில் இணைவார்கள் என்றும் யூரி உ‌‌ஷகோவ் கூறியுள்ளார். 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒரே மாதிரியான சிந்தனைகள் கொண்ட நாடுகள் ஒன்றாக செயல்படுவது சிறப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கசான் மாநாட்டுக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் செய்தி வெளியான போது அதனை இலங்கைக்கான ரஷ்ய தூதரகரம் நிராகரித்திருந்த போதிலும் புதிதாக இணைக்கப்பட உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது சுட்டிக்காட்டதக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *