மருதானை – மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்ணொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணையில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில், சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியுடன் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படும், வீடொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியால் குறித்த துப்பாக்கி அப்புறப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, கடந்த 20ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் துப்பாக்கியானது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அதன்படி முச்சக்கர வண்டி சாரதியும் கடந்த 22ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், துப்பாக்கியை ஜம்பட்டா வீதியில் கொண்டு சென்று வேறு ஒருவரிடம் கொடுத்தது தெரியவந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் துப்பாக்கியை பெற்றுக்கொண்ட சந்தேகநபர், நேற்று (24) கடலோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜம்பட்டா வீதி பிரதேசத்தில் கொலை முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 13, ஜம்பட்டா வீதியில் வசிக்கும் 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.